Sunday, April 10, 2011

இடைவெளி < > .....


தேர்தல் வரும்போது மட்டும் தொகுதிக்கு வர்ற அரசியல்தலைவர்கள் மாதிரி... எப்பவோ இடுக்கை இட்டது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விட்டத தொடரலாம்னு வந்திருக்கேன்... இதுவரை ஒட்டு போட்டு என்ன ஆதரிச்ச அன்பு உள்ளங்கள், இந்த முறையும் என்ன ஆதரிச்சு... உங்கள் பின்னுட்டங்களை தொடர்ந்து எழுதுங்க...


நம்ம அரசியல் தலைவர்களைப் போல என்னால இலவசமா கிரைண்டரோ / மிக்ஸியோ ... நாலு ஆடோ / ரெண்டு மாடோ... இந்த மாதிரி எளவு வாக்குறுதி எல்லாம் நான் தரப்போறது இல்ல (அடக்கி வாசி தம்பி).


என்ன நம்பி ஆதறிங்க... நம்பிக்கையோட... சுயசிந்தனையோட... சுயமரியாதையோட... பொதுநல சிந்தனையோட... தொலைநோக்கு பார்வையோட... எழுத்துக்கு நேரம் ஒதுக்கி, என்னோட சிந்தனைகளையும் கருத்துக்களையும்... ஏமாற்றம் தராமல் பதிவு செய்வேன்...


விரைவில்...



Monday, November 24, 2008

(அ) நாகரிகம்


மணி : 12.30

இடம்: அண்ணா சாலை பஸ் நிறுத்தம்.

நாகரிக சாயல் வித்யாவின் உடலிலும், உடையிலும் தெரிந்தது...

டி-ஷர்டும்...லோ ஹிப் ஜீன்சும்...ரிபோக் சூ சகிதமாக மொத பஸ் நிலையத்தில் தனி ஆளாய் தெரிந்தாள்.

"என்ன ஒரு ஆட்டோ கூட காலியா வரமாடேங்குதே " என்று சலித்துக் கொண்டே கை கடிகாரத்தை பார்த்தவள் 10 நிமிடம் கரைந்த்திருந்த்தை உணர்ந்ததாள்.

"நீங்க கேட்ட புத்தகத்த பாண்டி பஜார் பிரான்சில எடுத்து வெக்கிறோம், ஆனா சரியா 1 மணிக்கு கடைய சாத்திடுவோம்மா" என்று கடைக்காரன் தொலைப்பேசியில் சொன்னது நினைவில் வந்தது.

யோசித்துக் கொண்டே நின்றவள் எதிரில் அவளுக்காகவே வந்ததுப் போல்..."பாரிஸ் டு பாண்டி பஜார்" என்ற பலகையுடன் பல்லவன் பல் இளித்தது.

"பஸ்ஸிலயாவது போயிறலாம்" என்று எண்ணிக்கொண்டே வேகமாய் பல்லவனில் தஞ்சம் அடைந்தாள். ( ஏரியபின் தான் உணர்ந்தாள் உட்கார இடம் இல்லை என்று)

"ஒரு பாண்டி பஜார் கொடுங்க" என்று டிக்கெட்டை வாங்கியவள் பஸ்சின் பின் பக்கம் ஓரமாய் ஒதுக்கி நின்றாள்.அவள் நின்ற இடத்தின் அருகில் இருந்த இருக்கையில் நடுத் தர வயது ஆசாமி ஒருவர் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதை கவனித்த வித்யாவிற்கு ஒன்றும் வித்யாசம் தெரியவில்லை... அவளது கவனம் எல்லாம் எப்போது பாண்டி பஜார் வரும் என்றிருந்தது.

தேனாம் பேட்டை பஸ் நிறுத்தத்தில் இன்னும் சிலர் தம் பங்கிற்காய் பல்லவனில் இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர்.பஸ்சின் இடப் பற்றாக்குறையால் தன் கையை உயர்த்தி மேல் இருந்த கை பிடியை இருக்கப் பற்றினாள்.

அது வரை மறைந்திருந்த... வளைக்கப்பட்ட அவள் இடுப்பிற்கு திறப்பு விழா செய்யப்பட்டது.

ஏனோ எதோசையாய் மீண்டும் அந்த நடுத்தர வயது மனிதரை பார்த்தாள்.அவரது கண்கள் அவளது இடுப்பில் மையம் கொண்டிருந்தது அவளுக்குப் புரிந்தது.

"என்ன ஜென்மமோ, இதுக்கு முன்னாடி பொன்னையோ இடுபையோ பாத்ததில்லை" என்று கருவிக் கொண்டே நின்றாள்.

அந்த ஆசாமியோ நானும் கை பற்றும் வரை விடுவதாய் இல்லை என்ற குறிக்கோலோ ... பதித்த பார்வை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

வித்யாவின் கோபம் அவள் மண்டைக் கேறியது."இவங்களை எல்லாம் பொண்ணுக்க இல்லாத ஊருக்கு நாடுகடத்தனும், கண்ணை ரெண்டும் பிடுங்கி கையில கொடுக்கணும்" என்று சபித்துக் கொண்டே நின்றிருந்தாள்.

"பாண்டி பஜார் வருது பாருங்க ... வர ஸ்டாப்புக்கு மேல வண்டி போகாது " என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்த கண்டெக்டர்.அந்த நடுத்தர வயது மனிதரை பார்த்து...

" ஏம்பா கண்ணாயிரம் பாண்டி பஜார் வந்துறிச்சிப்பா... எதோ உன்னை எனக்கு தெரிஞ்ச்சதால... கண்ணு தெரியாதே பாவம்னு பத்தரமா எறக்கி வுடுறேன்... எத்தன மொற சொல்றது யாரையாச்சும் தொணக்கி கூட்டியான்னு" சொல்லிக்கொண்டே அவர் கையை பிடித்து இறக்கி விட்டார்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வித்யாவிற்கு... மணி 12.58 ஆனது கூட கவனிக்கத் தோன்றாமல் தன் அறியாமையை நினைத்து கடிந்துக் கொண்டே அவரை நெருக்கிக் கேட்டாள்...

"ஏன் சார் இங்கிருந்து உங்களுக்கு எங்க போகணும்"


முற்றும்.


ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் பெண் என்பவள் எதோ ஒரு வகையில் தனக்கான இடத்தை பெற்றிருப்பாள். தாயாகவோ, தமக்கையகவோ, மகளாகவோ... இப்படிபட்ட எதோ ஒரு பரிமாணத்தில் இச்சை இல்லா ஒரு உறவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயற்கையாய் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இதை எங்கள் வர்க்கம் பல முறை மறந்திருகிறது.

அழகை ரசிப்பது தவறில்லை,ரசனையாக மட்டும் இருந்தால்...

ரசனைக்கு அப்பாற்பட்ட மிருகப் பார்வை தவறானது.காதலுக்கும், காமத்திற்கும் எவ்வளவு வித்யாசம் இருக்கிறதோ...அவ்வளவு வித்யாசம் ரசனைக்கும், இச்சைக்கும் இடையில் இருக்கிறது. இதை என்று உணரப் போகிறோம். ஆதலால் என் இன வர்கமே...(ஒரு சில ஆண் வர்கமே) உன் பார்வையை மாற்று.

உலக விஞ்ஞானம் ஆயிரம் மடங்கு உயர்ந்தாலும், வாழ்க்கை தரம் பல்லாயிரம் கட்டங்கள் கடந்தாலும்... பெண்மைக்கான அழகு வர்ணனைக்கும் மேலான ஒன்று.

"அடுப்படியில் இருந்த பெண்கள் எல்லாம்

அடிமை விலங்கை உடைத் எரிந்து

சுயமாய் இடுக்கை இடும் காலம் வந்ததில்

பெரு மகிழ்ச்சி எனக்கு"


காலத்தால் மாற்றப்பட்ட செயல்கள் எவ்வளவோ இருந்தாலும் பெண்மைக்கான குணமும் இயல்பும் இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒன்று. இதை மறந்த பெண்கள் எல்லாம் நாகரிகம் என்னும்... கலாச்சாரங்களை கடந்த சீர்கேட்டிற்கு அடிமையாக்கப்பட்டு சிதைந்துக் கொண்டிருக்கிறாகள். நாகரிகம் வளர வளர உடுக்கும் உடையின் நீளம் குறைந்துக்கொண்டிருக்கிறது என்பது மனதை பாதித்த ஒன்று. இதன் விளைவு... விவரிக்க முடியாத சூழல்கள் பெண்மையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

பெண்டிரே...
"பெண்மையை படையலிடாமல், பட்டியில் இடுங்கள்".


"மானுடமே எதை நோக்கி உன் பயணம்
செய்ய வேண்டியத செய்ய மறந்தாய்
செய்ய கூடாததை
செய்துக் காட்டினாய்
விளக்கம் கேட்டால்
இது "நாகரிகம்" என்றாய்
மனிதனாய் பிறந்து
மிருகமாய் ஒரு வாழ்கை
விழிக்க இது தருணம்
விழி... எழு...
காரணம்
நீ செய்வது (அ) நாகரிகம்"

பி.கு: யாரையும் குறை சொல்லவோ, பிரரது சுகந்திரம் தவறென்றோ நான் சொல்லவில்லை... கலாச்சாரத்திற்கும் இயற்கைக்கும் முரண்பட்டு செயல் பட வேண்டாம் என்பது என் கருத்து.

கொஞ்சம் குழப்பி இருக்கேன்னு தோனுது.... இன்னும் எளிமையாக சொல்லி இருக்கலாம். குழம்பினவர்கள் மண்ணிக்கவும்.

Wednesday, November 19, 2008

"கவிதை எழுத ஆசை"


கவிதை எழுத முயற்சித்தேன்

"கவிதை" எழுதினேன்

ஆனால் கவிஞ்சன் ஆகவில்லை

காரணம் இதுவரை

நான் காதலிக்கவில்லை...



காதலித்து பார்

கவி கம்பனும் , கண்ணதாசனும்

உன் வீட்டு முற்றத்தில்

வரிசையிட்டு காத்திருப்பர்...



எழுத முயற்சித்து தோற்றுப் போனேன்

காதலே என்னையும் தத்தேடுத்துக்கொள்

எனக்கும் கவிதை எழுத ஆசை... கவிஞ்சனாக





Saturday, November 15, 2008

" விடியலுக்காக காத்திருக்கிறோம் "

இடம்: ராமேஸ்வரம் ( அகதிகள் முகாம் )

குறிப்பு : ரமேஸ்வரத்திகும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள தூரம் 31 மையில்.

______________________________________

என்று மாறும் இந்த நிலை...


அடிமை இல்லை ஏனினும்

அகதியாய் ஒரு வாழ்க்கை

இழக்க ஒன்றும் இல்லை

உயிரை தவிர...



உயிரே விட்டாலும்

எங்கள் உடல் கடலில் வீசி எரியப்படட்டும்

அப்படியேனும் சமாதானமாய்

நாங்கள் ஈழக் கரை சேர்வோம்



கன்னி வெடிகளும்

ராக்கெட் குண்டுகளும்

அலறல் சத்தங்களும்

கேட்டு வந்த எங்களுக்கு...

மொட்டுக்கள் பூத்தாலும்

கலவரமாய் தான் கேட்கின்றன



இங்கு ஆயிரம் சூரியன் உதித்தாலும்

எங்கள் விடியல் இங்கிருந்து

31 மையில் தொலைவில்

காத்திருக்கிறோம் விடியலுக்காக



என்று மாறும் இந்த நிலை ...

Friday, November 14, 2008

"அம்மா" உச்சரிக்காத வார்த்தை

அம்மா !
இது வரை நான் உச்சரிக்காத வார்த்தை
பிறர் அழைக்க கேட்டிருக்கிறேன்
ஆனால் நான் அழைத்ததில்லை
எங்கிருக்கிறாய் நீ ?
பத்து மாதம் எதற்காக சுமந்தாய்?
என் முகம் பார்த்ததுண்டா ?
என் ஸ்பரிசம் உணர்ததுண்டா ?
நீ வெறுக்க நான் செய்த தவறென்ன ?
என் தொப்புள் கோடி
அறுக்கும் முன்னமே
நம் உறவுக்கொடி
அறுக்கப்பட்டது
விளைவு ...
நான் வீதியில் அனாதையாய்
பெண்ணாய் பிறந்தது யார் செய்த குற்றம் ?
எ முண்டாசுக் கவிஞ்சனே
மீண்டும் ஒரு ஜன்மம் எடு...
எங்களின் உரிமைக்காக!
குறிப்பு : தென் மாவட்டங்களில் கடந்த 4 வருடங்களில் 300 பெண் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாம் என்று பெற்றோர் நிராகரித்து அரசு தொட்டிலில் போட்டதாக செய்தி.

Thursday, November 13, 2008

முதல் கிறுக்கல்...



முன் இரவு...
முதன் முதலாய் எழுத உட்கார்ந்தேன்
எதை பற்றி எழுதுவேன்
என்ன வென்று எழுதுவேன்
யோசித்து கிறுக்கியதில் உங்கள் பார்வைக்கு சில...

"என்னை போல அயல் நாட்டிலே வாழும் சகோதரர்கள் இழந்தது என்ன ?"

திரும்பிப் பார் - இழந்தது தெரியும்

காலம் கேட்டது
"கண்ணிரோடும் வியர்வையோடும்
எதற்காய் இத்தனை போராட்டம்
அடி மாட்டு விலைக்கு
அடிமையாய் ஒரு பயணம்
என்ன சாதித்தாய்?
பெற்ற சுதந்திரத்தை
காகிதத்திற்கு விற்றாய்
இத்தனை செய்தும்
நீ சேர்த்தது என்ன?
எங்கே பட்டியல் இடு..."

நானும் சொன்னேன்

"கத்தை கத்தையாய் பணம்
ஊரிலே சொந்த வீடு
சொந்தமாய் மோட்டார் வாகனம்
வசதியான வாழ்க்கை
வேறேன்ன வேண்டும் என்றேன் "

காலம் கேட்டது
நி இழந்ததை சொல்லட்டுமா என்று !
"சொல்" என்றேன்

"அன்னயின் பாசம்
தந்தையின் பரிவு
சாகோதரின் நேசம்
சகோதரயின் கனிவு
மனைவின் தனிமை
உன் குழந்தயின் சிரிப்பு
நட்பின் பரிசம்
இதோ உன் இளமையும் கூட..."

நான் இதை எப்படி மறந்தேன்
என்று யோசிக்க தொடங்க ...

காலம் சொன்னது

"இழந்தது ஒரு நொடியேனும்
அதை மீட்பது கடினம்"
"இனி யேனும் இழக்காமல் இரு"

யோசிப்பதில் இன்னும் ஒரு நொடியை இழந்துப் போனேன் !
எனக்கு செய்தி : "மகனே உனக்கு இப்படி ஒரு நிலை வரதுக்கு முன்னாடி ஊரை பொய் சேறு"





Tuesday, November 11, 2008

எழுத முயற்சிக்கிறேன்... தடுமாற்றத்துடன்

எனக்கு தெரியும் நான் நீந்த நினைப்பது குட்டையில் அல்ல கடலில் என்று... கடலின் ஒரு கரையில் இருந்து மறு கரையை அடைய ஓர் பயணம்.

எத்தனை வருட காதல் இது ...படித்ததோடு சரி, இதோ முதல் முதலாய் சுயமாய் ஓர் முயற்சி.

நான் கடைசியாய் தமிழில் எழுதியது இன்னும் என் நினைவில் இருக்கிறது, 2004ஆம் ஆண்டு அரேபிய மண்ணிலே விருபப்பட்ட அடிமையாய் விலைக்கு போனபின் உருக்கமாய் அம்மாவுக்கு எழுதிய கடிதம். அதன் பிறகு இதோ இந்த வலையில். நீண்ட வருடங்களுக்கு பிறகு என் தாய் மொழியில் எழுத எடுத்த இந்த முயற்சி எனக்குள் இனம் புரியாத ஓர் உணர்வை ஏற்படுத்தி இருகிறது (அம்மாவின் மடியில் தலைவைத்து படுபது ஓர் போல் ஓர் உணர்வு ).

எழுதி முடித்த இந்த பத்து வரிக்குள் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது எழுதுவது சுலபம் அல்ல... (எத்தனை குழப்பம் எதை பற்றி? எப்படி? எழுதுவேன் என்று)

வலை பூவில் எழுத எனக்குள் இந்த தாக்கத்தை ஏர்படுத்திய அறிமுகம் இல்லா இனிய தோழர்களுக்கு என் நன்றி (tamizhini, காயத்ரி8782, saravanakumar msk... மற்றும் பலர்)

விடுவதில்லை...
கரை சேருவேன் என்ற நம்பிக்கையுடன் :-)